பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.1-ல் தொடங்கும் உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் ரூ.5 கோடியில் அமைக்கப்படும் நீச்சல் குளத்துக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘தமிழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட 506 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கு 77 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து, அடுத்த கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களைவிட விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும். வரும் செப்டம்பர் 1-ம் தேதி பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க தனியார்கள் விண்ணப்பித்துள்ளனர். அவற்றை பரிசீலித்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Comments