குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் மாதம் கலந்தாய்வு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல்.

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கே.நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அதிகம் பேர் எழுதிய தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் எழுதிய தேர்வாக இருக்கும். அந்த தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு வித்தியாசமாக நடந்தது. தேர்வு எழுதியவர்களின் பெயர், பதிவு எண், புகைப்படம், தேர்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியதில்லை. வெளிப்படையாக தேர்வு நடத்தி வருகிறோம். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கும் சேர்ந்து ஒரே தேர்வாக நடத்தியதால் அரசுக்கு ரூ.12 கோடி செலவு குறைந்துள்ளது. குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேரின் மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பட்டியல் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டது. அக்டோபரில் கலந்தாய்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அனுப்பப்படும். அவர்கள் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இதனால் தேர்வு எழுதியவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும். அதன்பின்னர் குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு 3 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப்-4 தேர்வு அறிவிக்கும்போது 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது 11 ஆயிரத்து 280 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்போம். 15-ந் தேதிக்குள் குரூப்-2 தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வருகிற அக்டோபர் மாதம் வெளியிடப்படும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15-ந் தேதிக்குள் வெளியிடப்படும். இதன்மூலம் 1,547 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளிப்படைத்தன்மையாக தேர்வை நடத்துகிறது. கம்ப்யூட்டர் வழித்தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏற்கனவே 27 கம்ப்யூட்டர் வழித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 50 ஆயிரம் பேருக்கு குறைவான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வை கம்ப்யூட்டர் வழித்தேர்வாக நடத்த முடியும். அவ்வாறு தேர்வு நடத்தினால் விரைவாக முடிவு வெளியிடப்படும். தேர்வாணைய பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments