உரிய அங்கீகாரம் பெற 5 ஆயிரம் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு மேலும் ஓராண்டு கெடு நீட்டிப்பு

உரிய அங்கீகாரம் பெற 5 ஆயிரம் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு மேலும் ஓராண்டு கெடுவை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் நகரமைப்பு துறையினரிடமோ, உள்ளூர் திட்ட குழுமத்திடமோ, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமோ இவற்றில் ஏதாவது ஒரு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சுமார் 5 ஆயிரம் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் உரிய அங்கீகாரம் பெறாமல் கடந்த ஆண்டு இயங்கின. மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஓராண்டுக்குள் குறிப்பிட்ட அமைப்பிடம் அந்த பள்ளிகள் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதற்காக 31-5-2018 வரை அந்த பள்ளிகளுக்கு ஓராண்டு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதும் அந்த பள்ளிகள் உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. மாணவர்கள் நலன் கருதி மேலும் ஓராண்டு அதாவது 31-5-2019 வரை அந்த பள்ளிகளுக்கு கெடுவை அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;- சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், நிதி உதவி பெறும் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவை உரிய அங்கீகாரம் பெற மேலும் ஓராண்டுக்கு (31-5-2019) அனுமதி அளித்து அரசு ஆணையிடப்படுகிறது. எனவே நகரமைப்பு துறை, உள்ளூர் திட்டக்குழு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய ஏதாவது ஒரு அமைப்பில் அந்த பள்ளிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து அங்கீகாரம் பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments