போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார்.

போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்துவதற்காக, மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார். பயிற்சி வகுப்பு திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ‘உன்னால் முடியும்’ என்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாடு, வாழ்வியல் நெறிமுறை பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று காலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- இந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்துக்குள் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கப்படும். தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில் ஐ.ஏ.எஸ்.அகாடமி அடுத்த வாரம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்படும். குரூப்-1 முதல் குரூப்-4 வரை தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படும். கணினி மயமாக்கப்படும் தமிழகத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். பொறியியல் படித்தவர்கள் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். ஏழை குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் வரும் ஆண்டில் பிளஸ்-2 பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாட்டு பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் கிடைக்கும். அடுத்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகள் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ ஆக அடுத்த மாதம் முதல் மாற்றப்படும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும். அந்த வகுப்புகளுக்கு இணையதள சேவை வசதி செய்து கொடுக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் படிப்படியாக செயல்படுத்தப்படும். மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி உள்ளது. இதை அனைவரும் பயன்படுத்தி உதவிகள் கேட்கலாம். 25 ஆயிரம் பேர் தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் பேர் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்கிறார்கள். ஆனால் 2 லட்சத்து 85 ஆயிரம் பட்டய கணக்காளர்கள் (ஆடிட்டர்) மட்டுமே இருக்கிறார்கள். பிளஸ்-2 வணிகவியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தி 25 ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலமாக அவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும். நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments