ஊதிய முரண்பாடுகளை களையும் ஒரு நபர் குழுவின் காலம் மேலும் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் ஊதிய விகிதத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டன. அவற்றைக் களைவதற்கு நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. ஜூலை 31-ந் தேதியன்று அரசுக்கு இந்தக் குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்தக் குழுவிடம் ஏராளமான தனிநபர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் சித்திக் பல்வேறு விவரங்களை கேட்டறிந்து வருகிறார். அவர்களின் கோரிக்கை மனுக்களை ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அதற்கு ஒருநபர் குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துத் தர வேண்டும் என்று அரசுக்கு அதன் தலைவர் சித்திக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை கவனமாக அரசு பரிசீலித்து, ஒருநபர் குழுவின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது, அக்டோபர் 31-ந் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments