பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், அவர்களது பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆதார் இணைப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வருகையை கண்காணிக்க ‘பயோ மெட்ரிக்‘ வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. இந்த பயோ மெட்ரிக்குடன், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் ஆதாரையும் இணைக்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்.அன்னாள் என்ற ஆசிரியை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:- அரசின் பிரதிநிதிகள் தமிழக அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு தான் முதலாளி. பொதுநிர்வாகத்தை மேம்படுத்த ‘பயோமெட்ரிக்‘ திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் பிரதிநிதியாக அரசு ஊழியர்கள் திகழ்வதால், அவர்களது ஆதாரை ‘பயோ மெட்ரிக்‘ வருகை பதிவேட்டில் சேர்ப்பது ஒன்றும் விதிமீறல் இல்லை. தனிநபர் சுதந்திரம் என்பது கூட நிபந்தனைக்கு உட்பட்டதுதான். இப்போது அரசு ஊழியர்கள் மத்தியில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய தமிழக அரசு இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்க முடியாது பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்றும், பணி நேரத்துக்கு முன்பாக பள்ளியில் இருந்து சென்று விடுகின்றனர் என்றும் ஆசிரியர் பணிக்கு தொடர்பில்லாத வேறு வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர் என்றும் பல புகார்கள் வருகின்றன. எனவே, அவர்களது வருகையையும், பணி நேரத்தையும் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் இதுபோன்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற திட்டத்தை அரசு கொள்கை முடிவு அடிப்படையில் கொண்டு வரும்போது, அதை ஆசிரியர்கள் எதிர்க்க முடியாது. மனுதாரரிடம் ஆதார் இல்லை என்றால், அதை விண்ணப்பித்து பெறவேண்டும். ஒருவேளை மனுதாரர் ஆதார் அட்டையை பெற விரும்பவில்லை என்றால், அவர் தொடர்ந்து ஆசிரியர் பணியை தொடர்வதா? அல்லது அப்பதவியை விட்டு விலகுவதா? என்பது குறித்து முடிவு செய்யவேண்டும். வரிப்பணத்தில் ஊதியம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அதிகம் பேர் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப்பெறுகின்றனர். இத்தனைக்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. அவர்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர். ஆனால், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகள் மோசமாக உள்ளது. இது வரி செலுத்தும் மக்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் செலுத்தும் வரியின் மூலம் ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள், அனைத்து கல்வித் தகுதிகளையும் கொண்டிருந்தும், மாணவர்களுக்கு கல்வியை சிறப்பாக கற்பிப்பது இல்லை. அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பெரும் தொகையை ஆண்டுதோறும் வழங்குகிறது. அப்படி இருந்தும், சிறந்த கல்வி மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை. மாணவர்களின் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழவேண்டும். மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறேன். பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை தமிழக கல்வித்துறை விரைவாக அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். அப்போதுதான், கல்வி முறையில் ஆசிரியர்களின் திறமையை வளர்க்க முடியும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் விவரங்களை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இதில் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், ஆசிரியர்களின் பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால், அதாவது அதிக சொத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் மேற்கொள்ள வேண்டும். துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, அந்த வழக்கையும் முடித்து வைத்தார்.

1 comment:

  1. Teacher r not corruptive ,only politician in our contry corruptive , very very riticulous decision , unga sothukalai yar kanakku parpathu

    ReplyDelete

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||