குடிநீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை

குடிநீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. தமிழகத்தில் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டால் விடுமுறை விடக்கூடாது என்றும், அதற்கு ஏற்றாற்போல் மாற்று ஏற்பாடுகளை பள்ளிகள் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் 1974 மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் விதித்தொகுப்பு 1978, நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளுக்கான விதிகள், மழலையர் பள்ளிகளுக்கான விதிகளின் அடிப்படையில் தொடக்க அனுமதி, தற்காலிக அங்கீகாரம், நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அங்கீகாரம் வழங்கப்படும்போது, பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகி உறுதி அளித்துள்ள நிலையில், நிபந்தனைக்கு உட்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது குடிநீர் வசதி இல்லை என தெரிவித்து சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் இவ்வாறு விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும். எனவே, குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகளில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளி தொடர்ந்து நடைபெற தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் கடமையாகும். அவ்வாறு செயல்பட தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து வகை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை விடப்படாமல் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்டக்கல்வி அலுவலர் களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||