சிவில் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க 29-ந்தேதி வரை அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு

சிவில் நீதிபதி பதவிக்கு வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதியாக இணையதளத்தை திறந்து வைக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிவில் நீதிபதி தேர்வு

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் லட்சுமி, சண்முகப்பிரியா, பத்மாவதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவில் நீதிபதி பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக போட்டித்தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் 9-ந்தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு அக்டோபர் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி முதல்நிலைத்தேர்வு வருகிற நவம்பர் 24-ந்தேதியன்றும், பிரதான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 28 மற்றும் 29-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 9.9.2016 முதல் 9.9.2019 வரை சட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளும், 3 ஆண்டு தொழில் அனுபவம் உள்ள வக்கீல்களும் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க முடிந்தது.

அனுமதி

இதனால் 2016-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த அதாவது 9.9.2016-க்கு முன்பாக படிப்பை நிறைவு செய்த எங்களால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இது 2016-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கிடையே பாகுபாடு பார்ப்பது போல் உள்ளது. எனவே 2016-ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த எங்களையும் இத்தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தீர்ப்புக்கு கட்டுப்பட்டது

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

பின்னர் நீதிபதிகள், “மனுதாரர்கள் மட்டுமின்றி 2016-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் அனைவரும் இந்த சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் நேற்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 29-ந்தேதி வரை அனுமதிக்க வேண்டும். இதற்காக தனது இணையதளத்தை டி.என்.பி.எஸ்.சி, நிர்வாகம் திறந்து வைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்கள், வருகிற 31-ந் தேதிக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஏற்கனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுடன் சேர்த்து இவர்களுக்கும் அனுமதி சீட்டு போன்றவற்றை அனுப்பி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஆனால் இந்த இடைக்கால உத்தரவு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது” என உத்தரவிட்டனர்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு  தமிழக அரசு அரசாணை வெளியீடு 

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தை கணக் கிட்டு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடந்த ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: மாநில அரசு அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் முந் தைய ஆண்டு 9 சதவீதமாக இருந்த அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தி, 12 சதவீதமாக மே மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 5 சதவீதம் உயர்த்தியதை அடுத்து, அந்த ஆணையைப் பின்பற்றி, ஜூலை 1-ம் தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி 17 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படும்.

மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை யிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை, தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனையின்படி வழங்கப்படும். தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி முழுநேர பணி யாளர்கள், முழுநேர அலுவலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

குறிப்பாக, அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர் கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந் திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங் களில் வரும் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்.

மேலும், தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வரை ஊதியம் பெற் றால் ரூ.50-ம், அதற்கு மேல் ஊதியம் பெற்றால் ரூ.100-ம் இடைக்கால ஊதிய உயர்வாக கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.


பள்ளிக்கல்வித்துறையில் 3 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு : 4 பேர் டிரான்ஸ்பர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ், உள்ளிட்ட மூவருக்கு பதவி உயர்வும், நான்கு அதிகாரிக ளுக்கு பணி மாறுதலும் வழங்கி தமிழக அரசு அறி வித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல் வித் துறை முதன்மை செய லாளர் பிரதீப் யாதவ் வெளி யிட்ட உத்தரவில் குறிப்பிட் டுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி, கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியா கவும், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் முத்துக்கி ருஷ்ணன், தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி யாகவும் பதவி உயர்வு வழங் கப்பட்டுள்ளது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட் டுள்ளது. அதே போல் பள்ளிக்கல் வித்துறையை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு பணி மாறு தல் உத்தரவு அளிக்கப்பட் டுள்ளது. பள்ளிக்கல்வி இயக் ககத்தின் மின் ஆளுமைக் கான துணை இயக்குனர் டாக்டர் அனிதா சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அ லுவலர் புகழேந்தி ராமநாத புரம் மாவட்டத்திற்கும், ராம நாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் அரியலூர் மாவட்டத்திற்கும், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ஏ.ஆறுமுகம் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் மின் ஆளுமை பிரிவு துணை இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு மந்திரி சபை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் இந்த உயர்வு கணக்கில் கொள்ளப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,909.35 கோடி செலவாகும் எனவும், நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் (8 மாதங்கள்) மட்டும் ரூ.10,606.20 கோடி செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 49.93 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல்தான் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அதில் 5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கட்டமாக 5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பது எப்போதும் இல்லாத நடவடிக்கை எனக்கூறிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அரசு ஊழியர்களுக்கு இதுவும் ஒரு தீபாவளி போனஸ் போன்றதுதான் என்றும் தெரிவித்தார்.

இதைத்தவிர மேலும் சில திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை இந்த மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. முன்னதாக இதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதைப்போல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்து காஷ்மீரில் குடியேறிய குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரே கட்டமாக ரூ.5.5 லட்சம் வழங்கும் திட்டத்துக்கும் மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 5,300 குடும்பங்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? என்ற விவரத்தை அந்தந்த ஆசிரியர்கள் கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவற்றில் படிக்கும் மாணவ- மாணவிகளின் சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைப்போல பணி பதிவேட்டில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்யவும் சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? அரசு பள்ளியிலா அல்லது தனியார் பள்ளியிலா? போன்ற விவரங்களை அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்காக கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் ‘ஆசிரியர்களின் பிள்ளைகள் விவரங்கள்’ என்ற தனிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் சென்று ஆசிரியர்கள் தங்களுடைய பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அந்த பிரிவில், பிள்ளைகள் அரசு பள்ளியில் பயில்கிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை பதிவு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படிக்கவில்லை என்றால், எந்த தனியார் பள்ளியில் படிக்கிறாரோ? அந்த விவரங்களை அதன் கீழே கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் பிள்ளைகள் திருமணம் ஆகாதவராகவோ அல்லது கல்லூரியில் படிப்பவராகவோ இருந்தால் அவர்கள் ‘பொருந்தாது’ (நாட் அப்ளிகேபில்) என்பதை ‘கிளிக்’ செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவு, ஆசிரியர்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக கேட்கப்பட்டு இருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறியதாவது:-

ஆசிரியர்களின் நன்மதிப்பை கொச்சைப்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வி துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப்படி பெறப்படும் விவரங்கள் தேவையற்ற ஒன்று.

ஏதோ நாங்கள் மட்டும் அரசு சம்பளம் வாங்கி பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்காமல், அரசிடம் இருந்து ஊதியம் பெறும் அனைவரையும் இந்த கணக்கெடுப்பில் எடுத்து அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தால் இன்னும் சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


PGTRB 2019 OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குனர் நிலை - Tக்கான கணினி வழி தேர்வு 27.09.19, 28.09.19 மற்றும் 29.09.2019 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic-ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 07/10/2019 முதல் 09/10/2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள் முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிற வழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது
Download

10, 11, 12-ம் வகுப்பில் தவறியவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு

2018-19-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும், 2019-20-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மார்ச் 2020-ம் பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க கோரிக்கைகள் வந்தன. எனவே மாணவர்களின் நலன் கருதி, பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான அட்டவணை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இந்த 2 பருவங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்பின்னர், மார்ச் 2021 பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களும், வருகை புரியாதவர்களும் புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு எழுத வேண்டும்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.