அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? என்ற விவரத்தை அந்தந்த ஆசிரியர்கள் கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவற்றில் படிக்கும் மாணவ- மாணவிகளின் சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைப்போல பணி பதிவேட்டில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்யவும் சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? அரசு பள்ளியிலா அல்லது தனியார் பள்ளியிலா? போன்ற விவரங்களை அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்காக கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் ‘ஆசிரியர்களின் பிள்ளைகள் விவரங்கள்’ என்ற தனிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் சென்று ஆசிரியர்கள் தங்களுடைய பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அந்த பிரிவில், பிள்ளைகள் அரசு பள்ளியில் பயில்கிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை பதிவு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படிக்கவில்லை என்றால், எந்த தனியார் பள்ளியில் படிக்கிறாரோ? அந்த விவரங்களை அதன் கீழே கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் பிள்ளைகள் திருமணம் ஆகாதவராகவோ அல்லது கல்லூரியில் படிப்பவராகவோ இருந்தால் அவர்கள் ‘பொருந்தாது’ (நாட் அப்ளிகேபில்) என்பதை ‘கிளிக்’ செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவு, ஆசிரியர்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக கேட்கப்பட்டு இருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறியதாவது:-

ஆசிரியர்களின் நன்மதிப்பை கொச்சைப்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வி துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப்படி பெறப்படும் விவரங்கள் தேவையற்ற ஒன்று.

ஏதோ நாங்கள் மட்டும் அரசு சம்பளம் வாங்கி பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்காமல், அரசிடம் இருந்து ஊதியம் பெறும் அனைவரையும் இந்த கணக்கெடுப்பில் எடுத்து அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தால் இன்னும் சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||